.

Pages

Monday, August 27, 2012

'உம்மம்மா' நான் பாஸாயிட்டேன் !

"டேய் எழுந்துருடா.........என் கண்ணான வாப்பா.... "

என மெல்லிய குரலில் சப்தமிட்டவாறே.....

காதில் அலுக்கத், கழுத்தில் அஷரப் காசுமாலை, பொட்டிப்பீஸ் மேத்துணி, ஜெமிலாப்பத்தை வேட்டி...

என அணிந்திருந்த உயரமான திடகாத்திரமான உருவம் ஓன்று நிழலாக நின்றது அந்த சுபுஹு நேரத்தில், பட்டென்று கண்விழித்துப் பார்த்தால் அருகில் என் “உம்மம்மா”

“உம்மம்மா இன்னிக்கி “டீயுசன்” இல்லம்மா “சனிக்கிழமை” 4 வது “C” சார் வரமாட்டாரும்மா” என்றேன்....

அது இல்லடா இன்னிக்கு “ரெத்தனம்” தோப்பிலே தேங்காய் வெட்டு சீக்கிரம் குத்பா பள்ளி ஹஜரத்திட்டே “குரான்” ஓதிட்டு வந்துரு மகிழங்கோட்டை போவனும்..... எனச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் “அரிக்கன்”லைட்டை எனது கையில் தந்து வழியனுப்புகிறார்.

இங்கே எனது உம்மம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். என் மீது அன்பு கலந்த பாசத்தை பொழியக்கூடியவர் மட்டுமல்ல எனது படிப்பின் மீது அதிக அக்கரை எடுத்துக்கொண்டு “குடும்பத்தில் முதல் பட்டதாரி” யாக உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு எனக்கு தேவையானதை வாங்கிக் அவ்வப்போது கொடுப்பவர்.

குரான் ஓதிட்டு வந்தவுடன் நானும் எனது உம்மம்மாவும் தோப்பிற்கு சென்றோம்.

அங்கே காத்திருந்த வெட்டுக்காரர்களிடம் “வேலையை சீக்கிரம் ஆரம்பிங்கையா” லேட்டாவுது எனச் சொல்லியவாறு அவர்களை துரிதப்படுத்திவிட்டு தேங்காய் குமித்து போடும் “பற்றறை” க்குச் செல்கிறார் என் உம்மம்மா.

அப்போது என்னருகே வந்து மெல்லிய குரலில் டேய் “வாப்பா”........இந்த தோப்பு உனக்குத்தாண்ட.... அதனாலே கவனமா எல்லாத்தையும் பார்த்துக்க என்றதும்...

ஆமா... ஆமா...வேலைக்காக பெரிசா “ஐஸ்”ல்லாம் தலையில் தூக்கி வைக்காதே..... என பதிலைச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

தேங்காய் ஏதும் தாளைக்குள் விழுகிறதா ? வெட்டுக்காரர் ஒவ்வொரு மரத்திலும் தேங்காய்ப் பறிக்கிறாரா ? அது “நெத்து” க்காயா உள்ளதா ? பாலை, பூக்கமலை போன்றவற்றை எடுத்து ஓரிடத்தில் சேர்த்தவாறே கண்காணித்துக் கொண்டுச் செல்கிறேன்.

தேங்காய் வெட்டி முடிக்கப்பட்டு வீட்டிற்கும் வந்துவிட்டோம்.

காலங்கள் பல உருண்டு ஓடின....

இத்தனை நாள் பத்தாவது வரை யாரையும் பெயிலாக்க கூடாதுன்ற கவர்மெண்ட்டு சட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு ஒரு வகுப்பாக கவனமாகப் படித்து பாஸாயி வந்து இப்ப பத்தாவது முழுப்பரிச்சையும் எழுதியாச்சு... இனி ரிசல்ட்டுதான் “யா அல்லாஹ்” நான் பாஸாயிடனும் அதை முதலில் என் உம்மம்மாவிடம் சொல்ல வேண்டும் என மனதில் எண்ணியவாறே “மாலை மலர்” பேப்பர் வாங்க நம்ம MP காக்கா கடைக்கு ஓடுறேன்...

பேப்பரை வாங்கிப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி காரணம் “நான் பாஸாயிட்டேன்”.... இரவு பகல் எனப் பாராமல் விடா முயற்சியுடன் கவனமாக படித்த எனக்கு மகிழ்வைத் தந்த அந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக... இம்மகிழ்ச்சியைப் எனது உம்மம்மாவிடம் பகிர்ந்துகொள்வதற்காக எனது வீட்டை நோக்கி ஓடுகிறேன்...

வீட்டின் அருகே உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என ஒரேக் கூட்டமாகக் காணப்பட்டார்கள். உள்ளேச் சென்றால் எனது “உம்மம்மா” கட்டிலில் படுக்கையாய் காட்சியளித்தார்....தம்பி உம்மம்மா ”மவுத்தா போச்சுடா” என என் காக்கா சொன்னவுடன் எனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”..... “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”......என கத்தியவாறு அழுகிறேன்... இதைக்கண்டவுடன் அருகே உள்ள எனது உறவினர்களும் கூடி அழுதனர்.

மாதங்கள் பல ஓடின...

எனது உம்மம்மாவின் நினைவாக வீட்டில் உள்ள அந்த பொட்டகத்தை திறந்து ஒவ்வொன்றாய் பார்க்கின்றோம் எனது பெயருக்கு “ஹிப்பத்” செய்யப்பட்ட “ரெத்தனம்” தோப்பின் பத்திரம் அதில் இருந்தது.

தொலைந்த பொருளைத் தேடுவது போல் வாழ்க்கையில் “கல்வி”யை தேடிக்கொண்டே இருங்கள்... அது நிச்சயம் உங்களுக்கு பலனளிக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! )

ஒரு சகோதரனின் டைரியிலிருந்து.... !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers