.

Pages

Friday, July 26, 2013

'கவித்தீபம்' கலாமின் பிரார்த்தனை

மனக்குளத்தில் தூசிகளாய்
.....மடிந்திருக்கும் வேளையிலே
கனக்குமந்தப் பாவமெலாம்
.....கழுவுகின்ற மாதமன்றோ ?

உள்ளமென்னும் மணற்பரப்பில்
.....உலர்ந்துநிற்கும் குணச்செடிக்கு
வெள்ளமென்னும் அருளருவி
.....விழுந்திடவே இறைஞ்சுகிறேன் !

பொய்யொழித்துப் புறந்தள்ளிப்
.....பொல்லாங்குப் பேசாமல்
மெய்யடக்கி இருந்திட்ட
.....மெய்யான நோன்பாகும் !

ஆயிரம் திங்களினும்
…ஆங்கோர் இரவினையே
பாயுமுன் ஆற்றலாகப்
…பாய்ச்சும் இறைவனேநீ !

எரிகின்ற நரகமின்றி
.....எம்மையும் விடுப்பாயா ?
சொரிகின்ற அருளதனால்
சொர்க்கமும் தருவாயா ?

பசிவந்தால் பத்துகுணம்
.....பறந்திடுமாம் அத்தருணம்
பசிவந்தும் பக்குவத்தால்
.....பிறந்திடுமாம் நற்குணங்கள் !

ஷைத்தானை விலங்கிட்டுச்
.....சாதகமாய் நமக்காக
வைத்தானே இறைவன்தான்
.....வாழ்த்துகிறேன் அதற்காக !

தொழுகையின் வழியாகத்
.....தூயமனம் பெறுகின்றேன்
அழுகையின் வழியாக
.....ஆசைகளைத் துடைக்கின்றேன் !

கவனித்துப் பிழையறிந்து
...கண்களிடும் துளிகளலாம்
சுவனத்தின் மரங்களுக்குச்
....சொந்தமான விதைகளாகும் !

அழுகின்றேன் அல்லாஹ்வே
.....அரவணைப்பாய் அர்ரஹீமே
தொழுகின்றேன் தூயோனே
.....துடைத்திடுவாய்த் தீங்குகளை
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : இந்தக்கவிதை அமீரகத்தில் அய்மான் [ AIMAN ] சார்பாக நேற்று [ 25-07-2013 ] நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இனிய குரலில் அனைவரின் முன்பாக வாசிக்கப்பட்டன. இதோ அதன் ஒலிப்பேழை...

6 comments:

  1. கவித்தீபத்தின் கவிதையை அவர்களின் குரலில் முதன் முதலாகக் ஒலிப்பேழையில் நான் கேட்டது மகிழ்வைத் தருகின்றன.

    கவிதை உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் !

    வாழ்க வளமுடன் சூழ்க நல்ல கவியுடன்...

    ReplyDelete
  2. கவித்தீபத்தின் ''பிராத்தனை''

    கை கூப்பி இறை நினையும்
    கறை நீக்கி மறை உணரும்

    மகிழ்வினின்பால் மனம் மலரும்
    மற்றற்ற பிரார்த்தனையாம்.

    வாழ்த்துக்கள் என்றென்றும் நீடூழி னீர் வாழ்வீராக

    ReplyDelete
  3. குறிப்பு: பிரார்த்தனை என்னும் கவிதையைத் தமியேன் 25/07/13 அன்று அபுதபியில் AIMAN (Abudhabi Indian Muslim Association) நடாத்திய இஃப்தார் விழாவில் பாடினேன். அப்பொழுது எனக்குப் பல்வலியால் பல்லை (பல் டாக்டரிடம் சென்று) எடுத்த நிலையில் என்னால் கலந்து கொள்ள இயலுமா என்ற நிலையில் இருந்தும், நமதூரின் பெயருக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அதன் தலைவராய் இருக்கும் அய்மான் தலைவர் ஷாஹூல் ஹமீது அவர்களும் செயலர் காயல்பட்டினம் SAC HAMEED அவர்களும் வேண்டிக் கொண்டதற்கினங்க அக்கவிதையைப் பாடினேன் அவ்வரங்கில், மாஷா அல்லாஹ். அப்பொழுது எதிர்பாரா வண்ணம் அங்கு விழாவிற்கு வருகை புரிந்த மீரான் பிள்ளை என்னும் பெரும்புலவர்- காப்பியங்களும் கவிதைகளும் படைத்தத் தமிழறிஞர் அவ்ர்கள் (தேங்காய்ப்பட்டினம்) முன்னிலையில் தமியேனின் கவிதை அரங்கேறும் நேரம் வாய்த்தது யான் பெற்ற பேறென்பேன். அவர்களின் அறிமுகமும் கிட்டியது; நமதூர் அருட்கவி தாஹா அவர்கட்கு இவர்கள் தான் ஆசான் என்ற செய்தியும் எட்டியது.

    அச்சபையில் யான் இக்கவிதை வாசித்தபொழுது எடுக்கப்பட்ட நிழற்படம் எனக்குத் தாமதமாகக் கிட்டியது அதனை தம்பி நிஜாம் அவர்கட்கு அனுப்பி விட்டேன்; விரைவில் இங்குப் பதிவார்கள் என்று நினைக்கிறேன்.

    வாழ்த்துரைத்த விழிப்புணர்வு வித்தகர் நிஜாம் மற்றும் அதிரைக் கவிஞர் மெய்சா அவர்கட்கும் நன்றிகள்- ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா.

    ReplyDelete
  4. நிழற்படம் உடன் இடுகையிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றியை இத்தள்த்தின் நிர்வாகி அவர்கட்கு அறிவிக்கிறேன்.

    அதிரையின் பெயரை அகிலமெலாம் ஓங்கி ஒலிக்கச் செய்யும் வண்ணம் இன்ஷா அல்லாஹ் , இலக்கியப் பயணத்தில் என் உழைப்பு இருக்கும்; அதற்கான ஓர் அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் உங்களை மகிழ்விக்க வரும்; தமியேனின் இலக்கியச் சாதனைகட்குக் கிட்டிய மாபெரும் மற்றுமொரு அங்கீகாரமாகவும்; அதனால் நமதூர்க் கவிஞர்களை தமிழுலகில் தடம்பதிக்க வைக்கும் பணியை அடியேனின் உதவியால் செய்யப்படும் ஓர் அரிய செய்தியை இன்ஷா அல்லாஹ் வெளிவரும் நாளில் வெளியிடுவேன். அதற்கான ஒரு முன்னறிவிப்பு மட்டும் எனக்குக் கிட்டியுள்ளது,

    ReplyDelete
  5. கவியன்பன் ..,கவிதீபம் ...குரல் வளமும் ..கவிக்கு

    சுவை சேர்த்துள்ளது

    ReplyDelete
  6. ஜஸாக்கல்லாஹ் கைரன். அன்று பல்வலியால் பல்லை (மருத்துவரின் பரிந்துரையில்) அகற்றப்பட்டச் சூழலிலும் அடியேன் உங்களின் உறவினர் அய்மான் தலைவர் ஷாஹூல்ஹமீத் அவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்கி வாசித்தேன்; அம்மாமன்றத்தில் மக்களின் வாழ்த்துகளை நேசித்தேன்; வந்திருந்த சிறப்பு விருந்தினர் காவியக்கோ மீரான் பிள்ளை அவர்களின் நட்பை சுவாசித்தேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers