.

Pages

Tuesday, August 6, 2013

ஜகாத் ~ ஓர் பார்வை !

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத் :
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்துவிட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டுவிட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம்.

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதார  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

அவரவர் திறமைக்கேற்ப  பொருளீட்டும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை எடுத்தெறிந்து  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை இக்கடமை பெற்று இருக்கிறது. பொருளாதாரத்தின் ஆணிவேரான  உற்பத்திப்  பெருக்கத்துக்கு ஜகாத்  காரணமாகிறது. அடுத்து,  செல்வம் ஒரே  இடத்தில் குவியாமல் செல்வத்தின் பகிர்வு பகிர்வு என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மற்ற இசங்களுக்கு மத்தியில் ஆன்மீக முறையில் அடக்கமாக கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் பணியைச் செய்கிறது. மேலும் ஜகாத் பொருளாதாரத்தின் ஆதாரமான வேலை வாய்ப்புப் பெருக்கத்தையும் வாய்ப்புகளையும் அதிகமாக்குகிறது. உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது.

நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால்  உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால்  வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது.  இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும்.  பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது  முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்.

அடுத்து சொல்ல வருவதுதான் மிக முக்கியம்.

இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும்.  இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

மனிதப்  பிறவியின் மாறுபட்ட மோகம், பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற கெட்ட இயல்புகளை  மாற்றும் மாபெரும் சக்தி ஜகாத்துக்கு இருக்கிறது.

‘ஆசைகளின் மூட்டை’ என வர்ணிக்கப் படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடர்ந்து நியமப்படி ஜகாத்  வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

‘தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்’ என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது.  ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஜகாத்   செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும். பொது நல உணர்வு மேலோங்கும்.

பணம்படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை                       விளை விக்கின்றது.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்றுவரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் –இறையச்சத்தில்-  ஏழைகளுக்கு,  அவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

இறைமறையிலும் நபி மொழியிலும் வலியுறுத்திக் கூறப்  படுகிற ஜகாத்துடன் நவீனப் பொருளாதாரத்தை ஒப்பிட்டுக் காட்டினால் ஜகாத்தின் சிறப்பு இன்னும் புலப்படும்.

இன்றைக்கும் வளரும் நாடான நமது இந்தியாவில் நக்சலைட்டுகள் என்றொரு இயக்கம் உருவாகி வெறியாட்டம் போடுவதன் பின்னணியில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஏழைகளின்பால்               இறக்கமற்றவர்களின் செல்வக் குவிப்பு - தனக்கே எல்லாம் வேண்டும் என்கிற சுயநலப் போக்கு  காடுகளில் மலைகளில் பல ஏழை இளைஞர்களை நெஞ்சில் பொறாமையுடனும்  கையில் துப்பாக்கிகளுடன் வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்டு வைத்திருக்கிறது. பணக்காரர்கள் இரக்கமற்ற பாவிகளாக இருப்பதால் இல்லாதவர்களின் நெஞ்சில் அவர்களின் மேல் ஏற்படும் பொறாமைத் தீ  அமைதியான  வாழ்வுக்கு அங்கங்கே சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஜகாத்தின் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாடுகளில் - ஜகாத் வழங்கப் படும் சமுதாயத்தில் பணக்காரர்களின் மேல ஏழைகளுக்கு பொறாமைக்கு பதிலாக மரியாதை ஏற்படுகிறது என்பதே கண்கூடான காட்சி. ஜகாத் அரசாளும் பிரதேசங்களில் ஆண்டான் அடிமை வர்க்க பேதங்கள் அடிபட்டுப் போகின்றன. ஏழைகளையும் பணக்காரர்களாக்கும் இறைவனின் வித்தை இது . பணக்காரர்களை நன்மை செய்யத்தூண்டும் நற்பணி மன்றம் இது.

நவீனப் பொருளாதாரத்தில் வரிவிதிப்புக் கொள்கைகளை சில முறைகள் வரையறுக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது

“Keep it simple. The tax system should be as simple as possible, and should minimize gratuitous complexity. The cost of tax compliance is a real cost to society, and complex taxes create perverse incentives to shelter and disguise legitimately earned income.”  என்பதாகும் . அதாவது, எந்த ஒரு வரியும் வசூலிப்பதற்கு இலகுவாகவும்  எளிதாகவும்  இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.

இன்றைய அரசுகள் வசூலிக்கும் வரிகள் இந்தத்தன்மையைப்பெற்று  இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற சொல்ல நேரிடும். வரியை வசூலிக்க அந்த குறிப்பிட்ட வரியால் வரும் வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. விற்பனை வரிச்சட்டம்- வருமானவரிச்சட்டம்- நிலவரிச்சட்டம்- உள்ளூராட்சிவரிச்சட்டம் –  என்பன போன்ற சட்டங்கள், அவற்றிற்கான தனித்தனி அலுவலகங்கள்- அவற்றிற்கான ஊழியர்கள் என்றெலாம் அளவிடமுடியாத அமைப்புகள் மற்றும் செலவுகளை மேற்கொண்டே அரசுகளால் வரிகளை வசூலிக்க முடிகிறது. இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட இவற்றில்  பல கள்ளக் கணக்குகள்,  தில்லுமுல்லுகள், செப்பிடுவித்தைகள்,  ஏமாற்றுகள்,  நிலுவைகள் என்று   பலதகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் வசூலிக்க முடியாத நிலுவையில் உள்ள  வருமான வரிமட்டும் ஒழுங்காக வசூலிக்கப் பட்டால் அதைவைத்து எதிர்காலத்தில் வரியே போடாமல் ஆள முடியுமென்று ஒரு ஆய்வு கூறுகிறது. பலருடைய வரி பாக்கிகளுக்காக அவர்களுடைய இருப்பிடம் உட்பட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. இருக்கும்போது  நவாப்சாவாக இருந்தவன் இல்லாவிட்டால் பக்கீர்சாவாக ஆகிவிடுகிறான். வரியை  ஏய்ப்பதற்கு தகுந்தபடி கணக்கை சரிக்கட்டுவதற்கே தனித்திறமை பெற்ற ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அரசை ஏமாற்றி பதுக்கப் பட்ட பணம் கள்ளப் பணமாக உருவெடுத்து மற்றொரு பொருளாதார சீர்கேட்டின் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்கும் காரணம் , வரி வசூலிக்கும் முறையும் சரியில்லாமல் இருப்பது மட்டுமல்ல வரிகளின் விகிதமும் உச்சாணியில் ஏறி , ஏமாற்றுவதை  தூண்டிவிடும்வகையில் அதிகமாக இருப்பதுதான்.

இதற்கு மாறாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஜகாத் பிரதான  வரியாக விதிக்கப்படுவதாக நாம் கற்பனை பண்ணிப் பார்ப்போம்.  இறையச்சத்தின் அடிப்படையில் அமையும் அந்த சமுதாயத்தில் ஏமாற்று வேலைகளுக்கு வேலை இல்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இல்லை. இருக்கும் சொத்தை ஏலம் விட அவசியம் இல்லை. தந்து தேவைகள் போக திரளும் செல்வத்தில் மட்டுமே செலுத்துபவர் தரும் சதவீதம் மிகவும் குறைவு என்பதால் செலுத்துபவர்களுக்கும் கஷ்டம் இல்லை; அரசுக்கு வருமானம் திட்டமிட்டபடி வந்து சேரும். ஜகாத் செலுத்துவதும் இறைவணக்கத்தின் ஒரு பகுதி என்று ஆகிவிடுவதால்  இன்முகத்துடன் எல்லோரும் அவரவர் வைத்திருக்கும் செல்வங்களுக்கு ஏற்றபடி தந்துவிடுவார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் கூடுதலான சதகா என்கிற தர்ம சிந்தனையும் சேர்ந்துகொண்டால் ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும்  பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும்.  இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா?

நவீனப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் மாய்ந்து மாய்ந்து தீய்ந்து போவது இரண்டு விஷயங்கள் பற்றித்தான். ஒன்று உள்நாட்டில் வறுமை, மற்றது வெளிநாட்டுக் கடன் அதன் வட்டிமற்றும் அதன் குட்டிகள்.

அரசின் வரி  வருமானம் ஜகாத் மூலம் சரியாக , ஒழுங்காக வருமானால் அரசு வெளிநாடுகளிடம் கடனுக்காக கை ஏந்தவேண்டியது இல்லை. அதற்காக பெரும்தொகையை வருடாவருடம் உலகவங்கிகளுக்கு வட்டியாகக் கட்டிவிட்டு தனது நாட்டு மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு பணமில்லாமல் ஈரச்சாக்கைப் போட்டுப் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டியது இல்லை.

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது வருமானத்தில் 26% த்தை வெளிநாடுகளில் வாங்கிய கடன்களுக்காக அழுது வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முழுமையாக தரப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே பல கோடிமக்கள். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகை வட்டியாகப் போகிறது . இந்த சுமையில் இருந்து மீள வல்லுனர்கள் கூறும் கருத்து வரிகளையும் வரிகளின் நிலுவைகளையும்  வசூல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரி செலுத்தும் நிலுவைப் பட்டியலில் உள்ளவர்களோ மலை முழுங்கி மகாதேவன்களாக இருக்கின்றனர்.   அரசியலில் வாலாட்டும் தன்மை கொண்டவர்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டு அவ்வப்போது தப்பித்துக் கொள்கின்றனர்.  இந்த நிலையில் ,

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில்  44 சதவீதம் ஆகும். 

உலகம் முழுதும் இத்தகைய நிலைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொருளாதார சறுக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? யாரால் காப்பாற்ற முடியும்? இஸ்லாம் காப்பாற்றும். இஸ்லாமியப் பொருளாதாரம் காப்பாற்றும். காப்பாற்றச் சொல்லி இறைவனை நோக்கி கை ஏந்துவார்களா?

ஜகாத் பற்றிய இறைவனின் வாக்குகள், எச்சரிக்கைகள், நபிமொழிகள், வரலாற்று சம்பவங்கள் ஆகியவற்றை அடுத்து காணலாம்.

'மனிதவள ஆர்வலர்'
இப்ராஹீம் அன்சாரி

குறிப்பு : அதிரையின் பிரபல எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களால் 'இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்' என்ற தலைப்பில் 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற பிரதான இணையதளத்திலிருந்து நெடுந்தொடராக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நெடுந்தொடர் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடதக்கது.

3 comments:

  1. தர்மம் செய்யும் வழிமுறைகளைப்பற்றியும் அதனால் ஏற்படுகிற நன்மைகளைப்பற்றியும் அழகாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    நீண்ட பதிவாக இருந்தாலும் சமூக நலன் சார்ந்த ஏராளமான கருத்துகள் இந்தப்பதிவில் இடம்பெற்றுள்ளதால் பொறுமையுடன் வாசித்தேன்.

    அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  2. நல்ல விஷயம் ..நல்லோரிடம் சென்றடைய ..

    இது போன்ற படைப்புகள் மீள்பதிவு செய்து சிறப்பித்த

    விழிப்புணர்வு பக்கத்திற்கு வாழ்த்துக்கள் .


    மனித வள மேம்பாட்டு நிபுணர் அன்சாரி காக்கவிற்கு

    ஈத் முபாரக் ....

    ReplyDelete
  3. // ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம்.//

    தொழுகையை பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் இறைவன் ஜக்காத் பற்றி விழிப்புணர்வு தராமல் இல்லை.
    மனிதன் நிம்மதியாக வாழ பொருளாதாரம் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வரவேண்டும் என்று இறைவன் வேண்டுகிறான், கட்டளையிடுகிறான்.

    இறைவன் ஒருவன். அவனை பல மார்கம்/மதங்கள் பல நாமத்தில் அழைத்தாலும், இறைவனது சொல் எல்லோருக்கும் உடையது, உடைமையானது என்று நோக்கும் காலம் வரும்பொழுது, பொது நன்மை தரும் உண்மைகள் எங்கும் இலகுவாக சட்டம் ஆகாமல் போகாது.

    நல்ல விளக்கம்.

    மனிதவள ஆர்வலர் அவர்களுக்கு பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers