.

Pages

Friday, October 17, 2014

[ 4 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(9)
இடுக்கணுமேதாக்கி இதயமும் வாடும்
தடுக்கங்கள் சூழ்ந்திட்டே தாழ்த்த - மிடுக்குக்
குறைந்தாலும் மேன்மக்கள் கொள்கைத் தளரார்
இறையின்பம் இன்றி இரார்.

(10)
இருப்பதெல்லாம் ஏகனன்றி இல்லை அறிந்தும்
அருளின்றேல் ஆங்கே அசடே - இருள்நீங்க
ஒப்பற்றான் நேசர் ஒருவர் வழிகாட்ட
தப்பாதே தங்கத் தழுவு.

(11)
தழுவிட வேண்டும் தனியோன் விருப்பம்
நழுவிட வேண்டாமே நாட - இழுக்குகள்
நேர்ந்தும்இறைவன் நிலையுணரத் தன்னிலே
ஆர்ந்தே அவனை அறி.
.
(12)
அறியாமை ஆசை அறிவாக ஆகி
அறிந்திடுமே ஆற்றலாம் ஆதி - அறிவியல்
அன்றேதான் ஆரம்பம் ஆங்கே அசைவுகளாய்
அன்றியுமே அல்ல அகம்..
தொடரும்...
நபிதாஸ்

வெண்பா (9)
பொருள்: மனஅமைதி என்பதும் சுகம். அதனை சில சிதைக்கும் சூழல்கள் அமைதியின்மையை ஏற்படுத்த இதயம் வாடும். அவ்வாறான அல்லது அதற்கும் மேலான அமைதியைக் குலைக்கும் நிலைகள் ஏற்பட்டாலும் இணை என்றால் என்னவென்று அறிந்த மேன்மக்கள் அதற்கெல்லாம் அவர்கள் இடம்கொடாது என்றும் இறைவனை இணைவைக்காமல் வணங்கிய வண்ணம் அவனில் தனை இழந்து ருசிக்கும் இறையின்பம் கணப்பொழுதும் நீங்காது அதில் திளைப்பார்.

வெண்பா (10)
பொருள்: இறைவன் இன்றி எதுவும் இல்லை என்பதை இலகுவாகக் கூறிடுவார். ஆனால் அதன் உண்மைப் பொருளை விளங்கமாட்டார். இறைவனின் அருள்பெற்றவர்கள் அதன் பொருளை தெளிவாக விளங்கியாவர்கள். சொல்லும் வார்த்தைகளுக்கு தெளிவான விளக்கம் அறியாததும் அறியாமையே. அவ்வாறான அறிந்துக்கொள்ள இயலாமையை போக்க ஒப்பற்றவனாகிய இறைவனை தெளிவாக அறிந்து அவன் பொருத்தம் பெற்ற இறைநேசர்கள் போன்றவர்கள் ஒருவர் தெளிவுகளை வழிகாட்டினால் உடனே அதனை அடிபணிந்து ஏற்றுக்கொள்.

வெண்பா (11)
பொருள்: 'நான் மறைந்த கருவூலமாக இருந்தேன், என்னை அறியப்பட நாடினேன்,' 'அதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்ற இறைவனின் விருப்பம் உன்னிலும் நிறைவேற எத்தகையக் களங்கம் எதுவும் குழப்ப நேர்ந்தாலும் அதனை தவிர்த்து உருவமற்ற இறைவனில் இணையில்லாது மிகவும் ஆழமாக சிந்தித்தே அவனை அறிந்துக்கொள்.   

வெண்பா (12)
பொருள்: தான் தன்னை அறிந்திட என்றால், தன்னில் அறியாமையில் இருந்து தன்னை அறிந்திட என்பதாகும். அவ்வாறு அறிந்திடுதலே முதல் அசைவான ஆசையாகி தானே தன்னை தன்னில் அறிந்திடும் ஆதி என்ற இறைமை. இருக்கின்றதை அறிவது அறிவியல். எனவே என்று அறிய நாடியதோ அன்றே அறிவியல் தொடங்கிற்று. அவ்வாறான அகம் அனைத்திலுமே தன்னைத், தன்னைச் சூழவுள்ள அனைத்தையுமே அறிந்துகொண்ட இருக்கின்றது. இவ்வெண்பாவில் ஒரு சிறப்பு. இது முற்று மோனையில் அமைந்துள்ளது.

6 comments:

  1. ஒவ்வொரு வெண்பாவுக்கும் உரை நடையில் விளக்கம் தந்திருப்பது புதிய முயற்சி !

    ReplyDelete
    Replies
    1. வெண்பாவில் என்பாலுள்ள பொருளைச் சிந்திப்போர் தன்னுள் கொள்ள உரைநடைப் பொருள் எழுதுதல் கட்டாயம் ஆகியது.

      Delete
  2. வணக்கம்
    ஒவ்வொரு வெண்பாக்களும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி.
      தங்களது பின்னோட்டம் உற்சாகம் தருகிறது.
      நன்றி.

      Delete
  3. வெண்பாக்களின் பொருள் விளக்கம் தெளிந்த நீரோடையாய் அறியும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வெண்பா நீரோடையில் முக்குளித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers