.

Pages

Friday, February 27, 2015

[ 12 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(41)
அறிதலிலே ஒன்றின் அனைத்தானத் தன்னை
அறியுமிவர் ஆகார் அவனாய் - அறிந்தே
அவனடிமை என்பார் அகத்தின் தெளிவில்
இவனாக நிற்பார் இனி.

(42)
இனித்திடும் என்றுமே ஏற்றம் உயரத்
தனித்திடும் உச்சம் சமைந்து - கனிந்தே
அனைத்தையும் தாம்போல் அரவணைத்தே வாழும்
நினைத்திடவே இன்பம் நிறைந்து.

(43)
நிறைவினை உன்னில் நிறுத்த உணவும்,
இறைநிலையும் என்பார் இகத்தார் - முறையை
முறையாக ஏற்க முரணாய் எதிர்த்தும்
விறைத்திட்டே செல்லுதல் வீண்.

(44)
வீணாக இல்லை விபரங்கள் ஒவ்வொன்றில்
காணாமல் போனாலே கைசேதம் - தூணாய்த்
துணையிருக்கும் வாழ்ந்திடத் தோண்டிப்பார் எல்லாம்
பிணைப்பாக நிற்கும் பிடி.

நபிதாஸ்

வெண்பா (41)  
பொருள்: ஒன்றே அனைத்தானது என்பதில் வேறு என்பதில்லை. ஆதலின் தன்னையும் அவ்வொன்றின் அனைத்தானதில் இருக்கின்றது என்றறிந்தாலும் அவனடிமை என்றுதான் கூறுவார். இனியிவ்வாறானவொன்றினதின் அகத்தெளிவில் நிலைப்பார்

வெண்பா (42)  
பொருள்: ஒன்றினால் அனைத்தானதின் தத்துவம் பற்றி அறிதலில் அதனின் ஒவ்வொரு உண்மை நிலையைப் பற்றி அறிந்துவரும் போது மனதில் இன்பம் ஏற்படும். அதனின் உச்சமான அறிதலில் அவ்வறிவில் அறிந்தோராய்த் தனித்திடும். அந்நிலையில் நிலைத்து கனிந்து அனைத்தையும் தாம்போல் அரவணைத்து வாழும். அவ்வாறான வாழும் நிலைப்பற்றி நினைத்திடவே இன்பம் நிறையும்.

வெண்பா (43)  
பொருள்: உணவும், இறைமையும் மனதினில் நிறைவு ஏற்படுத்தும். நிறைவைத் தரவில்லையானால் வழிமுறைகளில் விலகியிருக்கின்றோம் என்பதாகும். நிறைவைத்தருகின்ற அதற்கான முறைகளை ஏற்காது முரண்பட்டு எதிர்பாகச் செல்லுதல் வீணே.

வெண்பா (44)  
பொருள்: ஒவ்வொன்றிலும் விபரங்கள் வீணாக இல்லை. அதனைத் தீர நன்கு அறிந்துக்கொள்லாமல் தவறெனச் செல்லுதல் கைசேதமே. எது தவறெனத் தீர்மானிக்கப்பட்டதோ அதுவே பின்னாளில் பக்கத்துணையாக இருக்கும். எனவே தீர விபரங்களை குற்றம் காணும் வழியில் காணாது நடுநிலையுடன் சிந்தித்து அறிந்துக்கொள்.

4 comments:

  1. வெண்பாக்கள் 100 வந்தவுடன் புத்தக வடிவில் வெளிவர இருக்கிறது. தொடரில் வாசகர்கள் - எழுத்தாளர்கள் பதியும் தலை சிறந்த ஒவ்வொரு கருத்துகளும் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கருத்தூண்றிக் கற்கக் கவனமாக வேண்டித்தான்
      கருத்தாகப் பின்னோட்டக் காட்டம் - கருத்தில்
      விருந்துகளும் பற்பல வீரியம் கொண்டே
      மருந்துகளாய் கண்டதின் மாண்பு.

      Delete
  2. சுந்தரத் தமிழினில்
    சந்தனமாய் மணத்திடும்
    வெண்பாக்கள்

    சிந்திக்கத் தூண்டிடும்
    சொல்லினில் பின்னிட்ட
    சொற்ப்பாக்கள்

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சுந்தரம் அன்னைக்குச் சொன்னதே என்றுமதில்
      மந்திரம் நன்றே மயக்கிடும்! - தந்திர
      வார்த்தையில் தந்ததன் வாசமும் ஈர்த்திடும்
      கோர்த்திட்டாய்ப் பின்னோட்டக் கூற்று

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers